வன பாதுகாப்புத் திணைக்களம்

1887 ஆம் ஆண்டு வன பாதுகாப்பளர் அலுவலகம் எனும் பெயரில் வன பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள வனங்களைப் பாதுகாத்தல் மற்றும் விஞ்ஞான ரீதியான வன முகாமைத்துவம் என்பன இதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது வன பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் 1885 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இலங்கையின் முதலாவது வன பாதுகாவளராக பிரித்தானியா - இந்தியா வன சேவை உத்தியோகத்தர் ஒருவராக காணப்பட்ட திரு. ஆர். தொம்சன் என்ற பெயருடைய ஆங்கிலேயர் நியமிக்கப்பட்டார். திரு. தொம்சன் அவர்கள் வெப்ப மண்டல வலயத்தில் வனங்கள் பற்றிய பாரிய அறிவினைக் கொண்டிருந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவராக காணப்பட்டதுடன் ஆரம்பத்திலே அரசாங்க அதிபர்களின் ஆலோசகராக பணியாற்றுவதே அவரது பணியாக அமைந்தது.

 

இந்தப் பதவியை உருவாக்குவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது யாதெனில் இலங்கையின் வன முகாமைத்துவம் தொடர்பான சிபாரிசுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட இந்திய வன சேவையில் பணியாற்றிய திரு. எப்.டி.. வின்சன்ட் அவர்களின் முயற்சியாகும். மேலும் கிவ் (kew) தாவரவியல் பூங்காவின் பிரதான உத்தியோகத்தர் திரு. ஜோசப் ஹூக்கர் அவர்கள் பேராதனை தாவரவியல் பூங்காவிலே அத்தியட்சகராக பணியாற்றிய திரு. வயிட்ஸ் அவர்களுடன் கிரெகரி ஆளுநரும் இந்தப் பணிக்காக பங்களிப்புச் செய்தவர்களில் முக்கிய இடம் வகிக்கின்றனர்.

 

1881 ஆம் ஆண்டிலே நீலப் புத்தக (Blue Book) அறிக்கையின் பிரகாரம் அப்போது இலங்கையின் வன எல்லையின் மொத்தப் பரப்பளவு முழு பூமிப்பரப்பளவில் 84% ஆகும். 1899 ஆம் ஆண்டிலே வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆரம்பத்துடன் இலங்கையில் சகல வனங்களதும் பாதுகாப்பு வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிரகாரம் நாட்டின் வனம் பற்றிய அனைத்து நிகழ்ச்சித் திட்டங்களையும் 6 பிரிவுகளாகப் பிரித்து அந்நிறுவனம் நிருவகித்து வந்தது.

 

1949 ஆம் ஆண்டிலே வன சீவராசிகள் திணைக்களம் நிறுவப்படும் வரையில் வன சீவராசிகளின் நிர்வாகமும் வன பாதுகாப்புத் திணைக்களத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இலங்கையின் மொத்த வனப்பரப்பில் சுமார் 55% வீதத்தினை வனப்பாதுகாப்பு திணைக்களமும் எஞ்சியுள்ள பிரதேசத்தை வன சீவராசிகள் திணைக்களமும் நிருவகித்து வருகின்றது. மேலும் பரந்து காணப்படுகின்ற சிறிய வனங்களின் அளவு ஏனைய அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதுடன் ஒருசில பகுதிகள் தனிப்பட்டோரது கட்டுப்பாட்டின் கீழும் காணப்பட்டது. இவற்றைவிட வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் வனச்செய்கை 90,000 ஹெக்டெயர் நிலப்பரப்பும் முகாமைத்துவப்படுத்தப்படுகின்றது.